கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக கேரளா வந்தார்.

அதே நேரத்தில் பிரதமர் மோடியும் கேரளாவில்  சுற்றுப் பயணம் செய்தார். ஒரே நேரத்தில் இவர்கள் இருவரும் சுற்றுப்பயணம் செய்ததால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

கேரளாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தன்னை தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி மக்களுக்கு, கொட்டும் மழைக்கு இடையே பயணித்து, நன்றி தெரிவித்து வருகிறார். 

இரண்டாவது நாளாக இன்று, வயநாடு மாவட்டம் கல்பெட்டா என்ற இடத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.  

இந்நிலையில்,  வயநாட்டில் சாலையோரம் உள்ள டீ கடைக்குள் திடீரென நுழைந்த ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து பஜ்ஜி, வடை, பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்ந்தார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு விட்டு  சென்ற சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. 

இதையடுத்து ராகுலை காண்பதற்காக  ஆயிரக்கணக்கான பொது மக்கள் அங்கு திரண்டனர்.