Ragul Gandhi speech the bjp mp are ran away from him
எங்க கட்டிப் பிடித்துவிடுவேனோ என்று பயந்து என்னைப் பார்த்ததும் பாஜக எம்.பி.க்கள் தெறித்து ஓடுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையோ, பிரதமரையோ நான் வெறுக்கவில்ல் என்று கூறி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து பரபரப்பை உண்டாக்கினார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், இதை சுட்டிக்காட்டி அவர் பேசினார். அதில், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி பேசும்போது, இப்போதெல்லாம் பா.ஜனதா எம்.பி.க்கள் எனக்கு எதிரில் வந்தால், 2 அடி பின்னால் தள்ளி நிற்கிறார்கள். எங்கே நான் கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து அப்படி செய்கிறார்கள் என்று பலத்த சிரிப்பிக் கிடையே தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் ஒருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். அவருடன் போரிடலாம். ஆனால், அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்றார்.

நாட்டைப் பற்றிய அத்வானி கருத்தும், என் கருத்தும் வேறு வேறானது. அதற்காக அவருடன் சண்டையிட்டாலும் வெறுக்க வேண்டியது இல்லை. அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும், சண்டையிடவும் முடியும் என்று பேசி அனைவரையும் கவர்ந்தார்.
