அரியானாவில் மகேந்திரகர் எனுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். 

இது தொடர்பாக அவர் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. கோடீஸ்வர தொழிலதிபர்களை மேலும் வளர்ப்பதே தான் மோடியின் நோக்கம் என குற்றம் சாட்டினார்.

2014ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் புகழ் பெற்ற 2 அல்லது 3 பொருளாதார நிபுணர்களை சந்தித்துப் பேசினேன். அப்போது ஏற்பட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நூறுநாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடியும்தான் முக்கியக் காரணங்களாக இருந்தன.

மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நீதி திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரியானாவில் ஆட்சியை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களவைத்  தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள் என கேட்டுக் கொண்டார்..

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பாஜக அரசு ஏழைகளின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து, கோடீஸ்வரர்களிடம் அளிக்கிறது. 5 மாநிலங்களில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தது. அது பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. உயர்த்தி உள்ளது. மக்களின் கவனத்தை மோடி திசை திருப்புகிறார்  என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.