ragul gandhi election campaign

பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போயிற்று ? எதற்கு செலவிட்டீர்கள் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி , பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பிரதமர் மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அம்மாநிலத்தில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இத்தேர்தலை ஒட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு தினமும் ஒரு கேள்வி எழுப்பி வருகிறார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் காரணமாக சிறு தொழில்கள் பாதிப்பு, பெண்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகளை தொடுத்து வருகிறார்.

தேர்தல் சமயத்தில் அவர் எழுப்பிவரும் கேள்விகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது.

இருப்பினும், இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

ரூ.55,000 கோடி எங்கே?

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி 10-வது கேள்வியை கேட்டுள்ளார். இதில் மலைவாழ் மக்களுக்கு அரசு ஒதுக்கிய ரூ. 55 ஆயிரம் கோடி பணம் என்ன ஆயிற்று? ஏன் மலைவாழ் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக நீடித்துவருகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ள 10- வது கேள்வியில் தெரிவித்துள்ளதாவது-

பழங்குடியின மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறிவருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பழங்குடியின மக்களின் சமுதாயத்தையே சிதைத்து வருகிறது.

அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 55,000 கோடி நிதி எங்கே சென்றது?

பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துள்ளீர்கள். பழங்குடியின மக்களுக்கு வனத்தில் உரிமை தரவில்லை. பழங்குடியின மக்களின் நிலங்களை லட்சக்கணக்கானோர் ஒப்பந்த அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளனர். பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மருத்துவமனை இல்லை. நிலமில்லாதோருக்கு வீடு இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஏன்? பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய பணம் எங்கே போயிற்று?

இவ்வாறு பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன செய்தீர்கள்?

22 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்? குஜராத் மக்கள் பதில் கேட்கிறார்கள் என்ற தலைப்பின் கீழ் அவர் பிரதமர் மோடிக்கு இந்த கேள்விகளை கேட்டுவருகிறார்.

கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. அளித்த உறுதிமொழிகள் என்ன ஆயிற்று எனவும் அவர் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவருகிறார்.

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று ( 9-ம் தேதி) நடைபெறுகிறது. 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.