இந்திய-சீன எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த முடியுமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் என்ற எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஒட்டுமொத்த உலகமும் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், அதை திசைதிருப்ப சீனா, இந்திய எல்லையில் படைகளை குவித்து போர் பதற்றத்தைத் உருவாக்கிவருகிறது. இந்தியாவும் எதிர்நடவடிக்கையாக ஏராளமான ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்து சீனாவை கண்காணித்து வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய-சீன எல்லையில் இருநாட்டு படைவீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது உண்மைதான், அதைத்தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையிலான ராணுவத் துருப்புகளை இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகில் சீனா குவித்துள்ளது,  இந்தியாவும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறது. எல்லை பதற்றம் குறித்து தற்போதைக்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன, ஜூன் 6-ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுடன் உரையாட இருக்கிறேன் என்ற அவர்,  இந்தியா யாருடைய இறையாண்மையையும் மீறாது அதேபோல், தனது இறையாண்மையை மற்றவர்கள் மீறவும் அனுமதிக்காது எனவும், இந்தியாவின் தலை யாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும்  வளைந்து கொடுக்காது என அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதியாக சொல்லமுடியுமா.? எல்லையில் என்னதான் நடக்கிறது.?  இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காத்துவருவது நிச்சயமற்ற தன்மையையும், யூகங்களுக்கும் வழிவகுக்கிறது, எனவே எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் கலைய வேண்டும். இப்படி தொடர்ந்து மவுனம் காப்பது நெருக்கடி காலத்தில் நிச்சயமற்ற நிலைமையை ஊக்குவிக்கிறது என பதிவிட்டுள்ளார். அத்துடன் ஜூன் 6-ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதி பிரச்சினையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் உயர்மட்ட இராணுவ சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ள அறிக்கையையும் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.