திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியில் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழ்துளை கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் நேற்றுமுன்தினம் அவரது 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். 46 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் போராட்டம் தொய்வின்றி நடந்து வருகின்றன.

100 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சுர்ஜித்தை பத்திரமாக மேலே கொண்டுவர தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பள்ளம் தொடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தை நலமுடன் அவனது பெற்றோரிடம் சேர வேண்டுமென்று இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குழந்தை சுர்ஜித்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே சுர்ஜித் விரைவில் மீட்கப்பட பிராத்தனை செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடே தீபாவளியை கொண்டாடி வரும் இந்த நேரத்தில், தமிழ்நாடு மட்டும் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்க போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் சுர்ஜித் மீட்கப்பட்டு அவனது பெற்றோருடன் இணைய தான் பிராத்தனை செய்வதகவும் கூறியிருக்கிறார்.