தபால் வாக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு என அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தெரிவித்துள்ளார்.  

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு அறையில் அக்டோபர் 04-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அக்டோபர் 23-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஜெயித்து விட்டதாக செய்தி வருவதாகவும், இன்பதுரை தற்போது துன்பதுரையாக உள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறுகையில், நானும் வழக்கறிஞராக உள்ளதால், வழக்கு நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருப்பதால் இது குறித்து மீடியாக்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுவாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வருகிறது. 2016 தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சான்றொப்பம் அளித்துள்ளார். விதிமுறைப்படி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் அளித்தால் செல்லுபடியாகாது என தெரிவித்தார். 

ராதாபுரம் தேர்தல் வழக்கிற்கு பிறகு இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனக்கு என் தந்தை அழகான தமிழ் பெயரை வைத்தது போல் ஸ்டாலினுக்கு அவரது தந்தை அய்யா துரை என்ற தமிழ் பெயரை வைத்து விட்டு பின்னர் அதை மு.க.ஸ்டாலின் என மாற்றிவிட்டார் என்பதை கேள்விப்பட்டுள்ளேன் என்றார். 

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்வதற்கு முழு உரிமையுள்ளது. முகாந்திரம் இருப்பதால் தான் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றக்கொண்டுள்ளது. தேர்தல் முடிவு தெரிந்து விட்டது என மு.க.ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். வழக்கின் முடிவில் நான் வெற்றி பெற்று இன்பதுரை, பேரின்ப துரையாக வருவேன் என மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.