ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதற்கு தடைகோரி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில், நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். 

அதில், வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். அதுபோல மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் தன் மனுவில் கோரியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அப்போது மனுதாரர் அப்பாவு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்று எந்திரத்தில் பதிவான வாக்குகளை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய அவரது மனுவை அவசர வழக்காக எடுக்க கோரினார். ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் இராதாபுரம் வாக்கு பதிவு இயந்திரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.