திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது சிகிச்சைக்கு தமிழக அரசு தயார் என சென்னை மண்டல சிறப்பு அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, “சுமார் பத்து நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சென்னை மண்டல சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் அன்பழகன். அப்போது தனது தம்பி சீனிவாசனும் அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணனும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சீனிவாசனையும் அவர் மனைவியையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தம்பியின் சிகிச்சை தொடர்பாக தன்னிடம் பேசிய ஜெ. அன்பழகனுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மருத்துவமனைக்கு போன் மூலம் தொடர்புகொண்டு அன்பழகனின் சிகிச்சை தொடர்பான தகவல்களை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். 

ஜெ.அன்பழகனின் சிகிச்சைக்கு எல்லா வகையிலும் உதவ அரசு தயாராக இருக்கிறது” என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள  தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் ராதாகிருஷ்ணன் உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.