ஆங்கிலேயர்களை எதிர்த்து தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் என பொதுக் கூட்டத்தில் பேசி அனைவரையும் அதிர வைத்துள்ளார் திரிபுரா முதலமைச்சர்.

25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. மாணிக் சர்க்கார் என்ற எளிய மனிதர் முதலமைச்சராக பணியாற்றி வந்தார்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அங்கு முதலமைச்சராக பிப்லப் தேப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய முறையில் பேசி வருகிறார்.

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் இருந்ததாகவும், இந்திய அழகி ஐஸ்வர்யா ராயை விடவா டயானா ஹைடென் அழகு என்று கேட்டு பின் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டவர் பிப்லப்.

இதே போன்று சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு சிவில் என்ஜினியரிங் படித்தவர்கள்தான் வரவேண்டும் என்றும்,  பட்டதாரிகள் அரசு வேலை தேடி அலைவதை விட்டு விட்டு டீக்கடை  அல்லது பீடா கடை வைக்கலாம் என்று  பல்வேறு சர்ச்சை கருத்துக்களை  தெரிவித்தார்.

இதையடுத்து அவரை டெல்லிக்கு அழைத்த பிரதமர் மோடி, இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று  கண்டித்தார்.

இந்நிலையில் உதய்பூரில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் விழாவில் பேசிய பிப்லப், ஆங்கிலேயர்களை எதிர்த்து தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தவர் தாகூர் என பேசினார்.

தாகூருக்கு அவரது புலமைக்காக 1913 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1919 ம் ஆண்டு ஜாலியன்வாலா பாத் படுகொலைக்கு எதிரான போராட்டத்தின் போது தனக்கு அளிக்கப்பட இருந்த வீரப்புலவர் என்ற பட்டத்தை தான் தாகூர் மறுத்தார் என்பது குறிப்டத்தகது. பிப்லப்பின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.