மதுரை திருமங்கலத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று பேசினார். “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக இருந்துவருகிறார். தற்போது எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 90 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்திய பிறகு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். அவருடைய போராட்டத்தை மக்கள் ரசிக்கவில்லை.

 
தற்போது எதிர்க்கட்சிகளுக்கு எந்தத் திசையில் செல்வது என்றே புரியவில்லை. எப்படி பயணம் செய்வது என்று  தெரியாமல் குழம்பிப்போய் கிடக்கிறார்கள். முதல்வரும் துணை முதல்வரும் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதால், அதிமுக மீண்டும் கோட்டையில் உட்காரும். ஒவ்வொரு தொண்டரின் உழைப்பால் அதிமுக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரியும். தமிழக மக்கள் எல்லோரும் அதையே விரும்புகிறார்கள்.


 நமக்கு உள்ள மக்கள் செல்வாக்கை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். அதற்காக அதிமுக தொண்டர்களாகிய நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து ஒற்றுமையாக உழைக்க வேண்டும்” என்று உதய்குமார் பேசினார்.