ஐந்து வருடங்கள் சேர்த்து வைத்திருந்த மிரட்டலான மரியாதையை வெறும் ஐந்தாறு நாட்களில் கெடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி! தனக்குத் தானே சூப் வைத்துக் கொண்டுவிட்டார்! இனி அவர் ஜெயித்தாலும் கூட பழைய கம்பீரம் அவருக்கு இருக்கவே போவதில்லை: மூன்றே வரிகளில் மோடியின் ஒட்டுமொத்த மரியாதையையும் ஊற்றி மூடியிருக்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள். 
விவகாரம் இதுதான்....

பிரதமர் நரேந்திர மோடி தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பி.ஜே.பி.யின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் பெரும் முயற்சியிலும், விருப்பத்திலும் இருக்கிறார். ஆனால் சூழ்நிலைகளோ வேறு மாதிரி சிந்திப்பது போல் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் மோடியின் செயல்பாடுகளால் அவர் மிக மோசமான கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியிருக்கிறார். 

இதுபற்றி பேசும் விமர்சகர்கள்...”பாலகோட் டில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதலுக்கு தானே காரணம் என்று ஜம்பமடித்து பேசிய மோடி, ரேடார் பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாமல் பேசிய வார்த்தைகள் அவரை அறிவார்ந்த சமுதாயத்தின் முன் கேலிச்சித்திரமாக்கி விட்டது. அடுத்து அவருக்காக நடத்தப்பட்ட ஒரு நாடக பேட்டியின்போது, எஸ்.எல்.ஆர். கேமெராவின் பயன்பாடு துவங்கிய காலம் பற்றி அவர் கூறிய விஷயங்கள் ஓரளவு படித்த மக்கள் மத்தியில் அவரது மரியாதையை மண்ணாக்கியது. 

அதன் பிறகு, கடைசி கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் முடிந்த மாலையில் பிரஸ்மீட்டில்  கலந்து கொண்டார் மோடி. தன்னை ‘ஏழைத்தாயின் மகன், எளியவன், வறுமையில் வாடியவன், உழைப்பாளிகளில் ஒருவன்’ என்றெல்லாம் சித்தரித்துக் கொள்ளும் மோடி,  பிரதமர் பதவி ஏற்ற ஐந்து வருடங்களில் முதல் முறையாக அன்றுதான் ஆர்கனைஸ்டாக செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் எதற்கும் பதில் சொல்லவில்லை. எல்லா கேள்விகளையும் பி.ஜே.பி.யின் தேசிய தலைவர் பொறுப்பில் இருக்கும் அமித்ஷாதான் சந்தித்தார். 
இந்த சம்பவமானது டி.வி.யில் இதை பார்த்த சாதாரண அடித்தட்டு மக்களிடம் கூட பெரும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. இந்த தேசத்தின் பிரதமர் பதவியிலிருப்பவர், நாடு தொடர்பான எந்த கேள்வியையும் எதிர்கொள்ள தயாரில்லை என்றால் ஏன் அந்த பிரஸ்மீட்? ஏன் இவருக்கு அந்த பதவி? என்று பொங்கிவிட்டனர். 

இப்படியாக எல்லா தரப்பு மக்களின் கிண்டல், எரிச்சல், கோபம் ஆகியவற்றுக்கு ஆளாகிய மோடி கேதார்நாத் பயணத்தின் போது, அவர் சாமி கும்பிடுவதை போட்டோ எடுக்க கூட ஒரு நபரி சிலைக்கு கீழே மடங்கி உட்கார வைத்ததையும், பனிக்குகையில்  தனிமையில் தியானம்! என்ற பெயரில் போட்டோ ஒன்றை எடுத்து பரப்பியதையும் மக்கள் கடுமையாய் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தேர்தலில் பெருவாரியான வெற்றியை பி.ஜே.பி. அணி பெற்று, ஆட்சியை தக்க வைப்பது பெரும் சந்தேகமே. ஒருவேளை அது நடந்து, மோடியே மீண்டும் பிரதமரானாலும் கூட அவருடைய பழைய கெத்து இருக்கவே இருக்காது இனி. அவரை மிரட்சியாகவும், பிரம்மாண்டமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்த காலங்கள் மலையேறிவிட்டன. இந்த ஐந்தாறு நாட்களில் அவர் செய்த கோமாளித்தனங்கள்தான் நினைவிலிருக்கும் மக்களுக்கு. 

மொத்தத்தில் மக்களின் விமர்சன தோட்டாக்கள் அத்தனையும் மோடியை நோக்கியேதான் இருக்கின்றன. இது இந்த கடைசி கட்ட தேர்தலில் பி.ஜே.பி.க்கு பெரும் பின்னடைவைதான் தரும்.” என்கிறார்கள். 
கவனிப்போம்!