புழல் சிறையே கமலாலயத்தில் இயங்குவதாகவும், தமிழக பாஜகவினர் இடமிருந்து பெண்களைக் காப்பதுதான் முதல் கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் நிறுவன நாளை முன்னிட்டு மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சௌமியா ரெட்டி எம்.எல்.ஏ. தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் மகளிரணியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் கட்சி கொடியேற்றி, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில், விஜயதாரணி எம்.எல்.ஏ கலந்துகொண்டார். நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுதா ராமகிருஷ்ணன்;- குற்றவாளிகளைத் தேடி போலீசார் எங்கும் அலையவேண்டாம். கமலாலயம் சென்றால் போதும். புழல் சிறையே கமலாலயத்தில் இயங்குவதாகவும், தமிழக பாஜகவினர் இடமிருந்து பெண்களைக் காப்பதுதான் முதல் கடமை என்றார். 

மேலும், பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இதை பற்றி மத்திய அரசும், மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியா முழுவதும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பாலியல் குற்றவாளிகளாக உள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.