நாங்குநேரி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கொடியை அதிமுக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். 
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்தது. கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளரிடம் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் புதிய தமிழக கட்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 
ஆனால், தேர்தலுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேறுவது, 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை வெளியிடுவது ஆகிய விஷயங்களில் ஆளும் அதிமுகவுக்கு புதிய தமிழகத்துக்கும் இடைவெளி அதிகரித்துவந்தது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு எந்தப் பதிலையும் சொல்லவில்லை. எனவே கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் சேராமல் ஒதுங்கி இருக்கிறார்.


இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதைக் காரணம் காட்டி ஆளுந்தரப்புக்கு புதிய தமிழகம் நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கிடையே நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கும் ஓரளவு ஆதரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சியின் கொடியை இடைத்தேர்தலில் அதிமுக பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணசாமியின் புகைப்படத்தையும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் கிருஷ்ணசாமியின் புகைப்படத்தைப் பயன்படுத்தவும் புதிய தமிழகம் கட்சியின் கொடியைப் பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.