அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் இணைந்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தங்களை ஒதுக்கினால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் எனக் கூறிய கிருஷ்ணசாமி தற்போது கூட்டணியில் இணைந்துள்ளார். திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த புதிய தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆதரவு கட்சியாக மாறியது. 

இந்நிலையில் பாஜக- அதிமுக கூட்டணியில் புதியதமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து யாரும் புதிய தமிழகம் கட்சியுடன் பேச முன்வரவில்லை. இந்நிலையில் தனித்து போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொகுதிப்பங்கீட்டுக்குழுவை கிருஷ்ண சாமி சந்தித்தார். அப்போது, இரு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியானது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தானது. அக்கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவளிக்கும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. புதியதமிழகம் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட இருக்கிறது.