விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்தது. கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளரிடம் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் புதிய தமிழக கட்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 

ஆனால், தேர்தலுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேறுவது, 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை வெளியிடுவது ஆகிய விஷயங்களில் ஆளும் அதிமுகவுக்கு புதிய தமிழகத்துக்கும் இடைவெளி அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடன் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு எந்தப் பதிலையும் சொல்லவில்லை. எனவே கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் சேராமல் ஒதுங்கி இருந்து வந்தார். 

இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு இருந்தால் டென்ஷன் குறையும் என உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து கிருஷ்ணசாமியின் ஆதரவை பெற அதிமுக முயற்சித்தது. அமைச்சர்கள் பட்டாளம் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு அளிக்க முடியாது எனக் கூறி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், நாங்குநேரி தேர்தலின் போது புதிய தமிழகம் கட்சியின் கொடியையும், தனது புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடாததால் ஆதரவு இல்லை. மேலும், அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எங்களது கோரிக்கைகளுக்கு அதிமுக அரசு செவிசாய்க்காததால் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.