குடும்ப பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை வரவேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் இதைப் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், “பெண்களுக்கு அரசுப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு போன்ற திட்டங்களால் இந்தியாவுக்கே முன்னோடி கருணாநிதி. வர்ணாசிரமம் - மனுஸ்மிருதி போன்றவற்றைக் காரணம் காட்டி பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் அம்பேத்கர் தடைகளை உடைத்திட முயற்சித்தபோது பழமைவாதிகள் குறுக்கே நின்றனர். அதனால், அவர் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது வரலாறு.


இந்நிலையில்தான் 1929-ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெரியார், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும்’ என இயற்றிய தீர்மானத்தை 1989-ல் கருணாநிதி நனவாக்கினார். பெண்களுக்கான குடும்பச் சொத்துரிமை குறித்த வழக்கில் ஆகஸ்ட் 11 அன்று குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு’ என கருணாநிதி நிறைவேற்றிய சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஏற்கனவே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் நிறைவேறாத நிலை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன். பழமைவாதிகளை நிராகரித்துவிட்டு, நீண்டகாலமாக நிறைவேறாமல் இருக்கும் நாடாளுமன்றம் – சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடையும் சேர்த்து பா.ஜ.க அரசு அமல்படுத்த வேண்டும்!’ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.