சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு என்று பதிவை நீக்கும்படி தமிழக ஆளுநருக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே திமுகவினர் அழைக்கிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலினும் கடிதம் எழுதும்போது ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பாஜக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்” என்று விளக்கம் அளித்தார்.
என்றாலும் திமுக அரசு தொடர்ந்து பயன்படுத்தும் இந்த வார்த்தைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேபோல புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவைக் குறிப்புகளில் ‘ஒன்றிய அரசு’ என்று பதிவை நீக்கும்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மத்திய அரசை, ‘இந்திய மத்திய அரசு’, இந்திய மைய அரசு’, ‘இந்திய நடுவண் அரசு’ என்றே தமிழில் அழைத்தார்கள். அண்மைக் காலத்தில் பதவியில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வேறு பதங்களில் அழைத்ததில்லை.
மே 7-ல் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறார். தமிழில் ஒன்றிய என்பது பஞ்சாயத்து அளவில் அழைக்கப்படும் பெயராகும். அரசியலமைப்பில் கூறப்பட்டதை மாநிலங்களின் ஒன்றியம் என்று வேண்டுமென்றே சிதைப்பதற்கு இந்த வார்த்தையை திமுக பயன்படுத்துகிறது. இதனால் இந்த வார்த்தை மத்திய அரசை இழிவுபடுத்துகிறது. அவர்கள் இந்தியா அல்லது பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தயாராக இல்லை. ஆனால், அவர்கள் மாநிலத்தை தமிழ்நாடு அரசு என்று அழைக்கிறார்கள் .தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்களும் தற்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்படுவதற்கான உறுதிப்பாட்டுடன் பதவியேற்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் தேசத்துக்கு எதிராக உள்ளது.
கடந்த 21ஆம் தேதி தாங்கள் சட்டப்பேரவையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தாங்கள் பேசினீர்கள். ஆளுநரின் தமிழ்ப் பேச்சில், ‘ஒன்றிய அரசு’ என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் க்கூட பயன்படுத்தவில்லை. இதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளார்கள். தமிழ் உரையை நான் படித்தபோது ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையில் இந்திய தேசம் அல்லது இந்திய அரசாங்கத்திற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசின் தலைவரான தாங்கள், ஸ்டாலினும் அவரது சகாக்களும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த வார்த்தை இந்திய இறையாண்மை மீதான பிடியைக் குறைத்து, தமிழ் மக்களிடையே இந்திய தேசத்திற்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்திவிடும். அனைத்து வகையான பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவை அனைத்தும் இந்த ஒத்த வார்த்தையுடன்தான் தொடங்குகிறது.” என்று கடிதத்தில் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கும்படியும் கடிதத்தில் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
