மனைவியால் கணவன்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, கணவர்களுக்கென‘புருஷ் ஆயோக்’ என்றஅமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுபாஜக எம்.பி. ஹரி நாராயணன் விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளார்.

காலம் காலமாக பெண்கள்தான், ஆண்களால் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் சரிக்கு சமமாய் பெண்கள் வந்துவிட்ட போதிலும், குடும்ப உறவுநிலைகளில் பெண்கள் இன்னும்அடிமைபோலவே நடத்தப்படுகின்றனர்.

பெண்களை பாலியல் போகப் பொருளாக பார்க்கும் கொடுமைக்கு இப்போது வரை முடிவுகட்ட முடியவில்லை. மத்தியில் பாஜக ஆட்சியில்பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பாலியல் வல்லுறவுக் குற்றங்களை இழைப்பவர்கள் பெரும்பாலும் பாஜகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

அக்கட்சியின் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் துவங்கி உயர்மட்டத் தலைவர்கள் வரை யாரும் விதிவிலக் கில்லை.இந்நிலையில், பெண்களால் ஆண் கள் பாதிக்கப்படுவதாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஹரி நாராயணன், கூறியுள்ளார்.

 “கணவர்களால் மனைவியர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன; அதேபோல மனைவியரால் கொடுமைக்கு உள்ளாகும் கணவர்களும் இருக்கிறார்கள்: பொய்யான வரதட்சணை புகாரால் கணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; எனவே, ஆண்களின் பாதுகாப்புக்காக, குறிப்பாக கணவன்மார்களுக்காக ‘புருஷ் ஆயோக்’ என்ற அமைப்பை துவக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

அவரின் இந்தப் பேச்சைக்கேட்டு அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிரிப்பாய் சிரித்துள்ளனர். எனினும் ஹரி நாராயணன் சீரியஸாகவே இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

ஹரி நாராயணன் பேச்சுக்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான அருள்துமிலன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஹரி நாராயணன் பேச்சைக் கேட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரித்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்