உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பாரத பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு  பதிண்டா திரும்பினார் பிரதமர்.

பிரதமர் மோடி பஞ்சாப் வருகையின்போது அம்மாநில போலீசாரே அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த போராட்டம் மாநில அரசால் திட்டமிட்ட ஒரு செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அங்கு நடந்த நிகழ்வுகளுக்கு கண்கூடாக பார்த்த தானே சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அம்மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு விமானம் வாயிலாக சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம் உள்ள உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்க பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திட்டமிட்டபடி பிரதமர் பதிண்டா விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து உசைனிவாலா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்ல இயலாத நிலையில் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டு, பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பாரத பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா திரும்பினார் பிரதமர்.டெல்லிக்கு புறப்படும் முன்பு நான் உயிருடன் வந்து சேர்ந்து விட்டேன் என் நன்றியை உங்கள் முதல்வருக்கு கூறுங்கள் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து வருவதுடன், பிரதமரின் ஆயுள் உறுதிபட, அவரின் பாதுகாப்புக்காக பல்வேறு வழபாடு, யாகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராக பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த பஞ்சாப் மாநில முதல்வர் சரப்ஜித் சிங் சன்னி உண்மையில் பிரதமருக்கு உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, அவரது பயணத்தை ரத்து செய்ய காரணம் பெரோஸ்கான் கூட்டத்திற்கு தேவையான கூட்டம் கூடவில்லை என்பதே ஆகும், பிரதமர் வருவதை அறிந்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மத்தியரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது எனக் கூறியிருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காக மோடி மலிவான அரசியல் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில்பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆர் லதர், பிரதமர் மோடியின் வருகையின் போது எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநில அரசால் செய்யப்படவில்லை அதற்கு மாறாக பிரதமரின் வருகைக்கு காவல்துறையினரே எதிர்ப்பு தெரிவித்து அவரது பாதுகாப்புக்கு ஆச்சுறுத்தலாக இருந்தனர். அதற்கு நானே சாட்சி எனக் கூறியுள்ளார்.

"

மேலும் கூறியுள்ள அவர் பிரதமரின் வருகையின்போது லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அப்போது பிரதமரின் வருகையை அறிந்த அவரின் பாதையில் திடீரென விவசாயிகள் மறியலில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தில் ஏராளமான போலீசார், மற்றும் போலீஸ் வாகனங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் அப் போராட்டக்காரர்களுடன் மிக சகஜமாக இருந்தனர். அவர்களை அப்புறப்படுத்தவோ, அவர்களை கலைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரின் வாகனம் 20 நிமிடங்களுக்கு மேலாக பாலத்தின் மீது நின்றது. அப்போதும்கூட பஞ்சாப் போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது அனைத்தையும் நான் கண்கூடாக பார்த்தேன். முழுக்க முழுக்க இது பஞ்சாப் மாநில அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு போராட்டம் என்று என்னால் 100% அடித்துக் கூற முடியும் என அவர் கூறியுள்ளார். அவரின் அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.