சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33 சதவீதம் வரை தலித்துகள் உள்ளனர், எனவே சரண்ஜித் சிங் சன்னி தற்போது முதல்வராக்க பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தின் 16-ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டது முதல், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்த நிலையில் முதல்வர் பொறுப்பிலிருந்து அமரீந்தர் சிங் அதிரடியாக பதிவி விலகினார். 

இந்நிலையில் அடுத்து யார் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி, சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தலித் மக்களின் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சரண்ஜித் சிங் சன்னி, மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சண்டிகரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக இது முடிவு செய்யப்பட்டதாகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

சரண்ஜித் சிங் சன்னி ஏற்கனவே தொழில்நுட்ப, கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியவர் ஆவார். சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இன்று காலை அவர் முதலமைச்சராக பதவியேற்றார், அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம்பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதலமைச்சராக பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். முதலமைச்சராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33 சதவீதம் வரை தலித்துகள் உள்ளனர், எனவே சரண்ஜித் சிங் சன்னி தற்போது முதல்வராக்க பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாபில் முதலமைச்சராகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.