இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டப்போகிறது. 1695 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனா கட்டுக்குள் வராததால் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு தொடர்ந்துவருவதால், ஏழை, எளிய மக்களும், தினக்கூலி தொழிலாளர்களு, அமைப்பு சாரா தொழிலாளர்களும் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்துவருகின்றனர். அவர்களுக்கான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன. 

ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசுகள் வருவாயை இழந்து பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் தவித்துவருகின்றன. எனவே மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி கேட்டுவருகின்றன. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கினாலும் அது, இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க போதவில்லை. மாநில அரசுகள் கோரும் நிதியை மத்திய அரசுகளும் கொடுப்பதில்லை. 

எனவே வருவாயை ஈட்ட மாநில அரசுகள் ஒயின் ஷாப்புகளை திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. பாதிப்பு கட்டுக்குள் வருவதாயில்லை. இதற்கிடையே, தெலுங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மே 17ம் தேதிக்கு பிறகு என்ன? அதன்பின்னர் என்னை செய்யப்போகிறது மத்திய அரசு? ஊரடங்கை நீட்டிப்பதை மத்திய அரசு எதனடிப்படையில் தீர்மானிக்கிறது? ஊரடங்கில் இருந்து எப்படி திரும்பப்போகிறோம் என்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

இதையடுத்து பேசிய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், சோனியா காந்தி ஜி சொன்னதை போல, ஊரடங்கிற்கு பின் என்ன நடக்கப்போகிறது? மத்திய அரசின் திட்டம் என்ன? என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மாநில முதல்வர்கள், மத்திய அரசின் திட்டம் குறித்து கேட்டறிய வேண்டும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அதன்பின்னர் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப்பில் நான் இரண்டு கமிட்டிகளை அமைத்துள்ளேன். ஒரு கமிட்டி, ஊரடங்கிலிருந்து  மீண்டுவருவது குறித்தும் மற்றொரு கமிட்டி பொருளாதார சரிவை மீட்டெடுப்பது குறித்தும் திட்டங்களை வகுக்கும். பிரச்னை என்னவென்றால், டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, தேசியளவில் கொரோனா பாதிப்பு மண்டலங்களை பிரித்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கள எதார்த்தமும் களத்தின் இருக்கும் சிக்கல்களும் தெரியவில்லை என்று அமரீந்தர் சிங் மத்திய அரசை விமர்சித்தார். 

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஊரடங்கை தளர்த்துவதற்கும் ஏதுவாக கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மத்திய அரசு, இந்தியாவில் உள்ள மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அமரீந்தர் சிங் இப்படி விமர்சித்துள்ளார்.