அமைச்சர் ஜெயக்குமாருக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகளின் சார்பில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்குமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தியிருப்பதாக முதல்வர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழகத்திற்கே அவமானம் என தெரிவித்தார்.

ஸ்டாலினின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் தவறான கருத்தை பதிவு செய்துவிட்டார். தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க முடியாது என பிரதமர் கூறவில்லை. முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்குமாறும் அதன்பிறகு அவர் சந்திப்பதாகவும்தான் கூறினார் என விளக்கமளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் விளக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, அமைச்சர் ஜெயக்குமாருக்கு சவால் விடுத்துள்ளார். அதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்திவிட்டால், நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

அந்த அளவிற்கு, முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மாட்டார் என்பதில் உறுதியாக உள்ளார் புகழேந்தி.