சின்னம்மாவே என் தெய்வம்! தினகரனே என் தலைவன்!...என்று சசிகலா சிறைக்குள் செல்லும் போது பரப்பன அக்ரஹாராவில் நின்று படு ஷோக்காக கூவினார் பெங்களூரு புகழேந்தி. அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த தினகரனால் துவக்கப்பட்ட ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்’ கர்நாடக மாநில செயலாளராக அமர்த்தப்பட்டார். பதவி என்னமோ கர்நாடகத்தில் இருந்தாலும், புகழேந்தி தஞ்சமடைந்தது போல் சுற்றிச் சுற்றி வந்தது என்னவோ தமிழக்த்தினுள்தான். அ.ம.மு.க.விலிருந்து கலைராஜன், செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ் செல்வன் போன்றோ விலக முயற்சித்தபோது பெரியளவில் அவர்களை தடுக்க முனைந்தார். தினகரன் கூட ‘யார் சென்றாலும் கவலையில்லை. ஆனால் புகழேந்தி சென்றால் வருந்துவேன்’ என்றார். 


இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஓசூர் தொகுதியில் போட்டியும் இட்டார். ஆனால் மிக மோசமாக தோற்றார். இந்த தேர்தல் சமயத்தில்தான் தினகரனுக்கும், புகழேந்திக்குமிடையில் ஏதோ பிணக்கு ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகமாகி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் வெளிப்படையாக வெடித்தது. தினகரனை வெளிப்படையாகவே விமர்சித்தார் புகழேந்தி. ஆனால் இன்று வரையில் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை தினகரன். புகழேந்தி குறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்வதுமில்லை. இந்நிலையில், ‘தினகரனின் ஏதோ ஒரு ரகசியம் பற்றிய ஆதாரம் புகழேந்தியின் கையிலிருக்கிறது. அதற்கு பயந்தே அவர் இவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதேபோல் சசிகலா மீதிருக்கும் மரியாதையாலேயே அந்த ரகசியத்தை புகழேந்தியும் வெளியிடுவதில்லை.’ என்று அ.ம.மு.க.வினரே பேசுகின்றனர். 
இந்த சூழலில் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இயங்க துவங்கியிருக்கும் புகழேந்தி, சமீபத்தில் எடப்பாடியாரை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக சேலத்தில் ‘மாங்கனி நகரில் மாறுதல் காண்போம்’ எனும் தலைப்பில் அ.ம.மு.க.வின் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு ஆலோசனை கூட்டமே போட்டார். 


முதல்வரின் பூரண ஆதரவு இருப்பதால், முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே புகழேந்தி கூட்டங்களை நடத்தி தினகரனுக்கு ரிவிட் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில் கூட ‘தினகரனின்  கூடாரமானது ஆளே இல்லாமல் காலியாகிவிட்டது. அது காலியான கூடாரம். அவரால் அந்த கட்சியை பதிவு கூட செய்ய முடியாது. முக்கிய நிர்வாகிகள் 16 பேர் விலகிய பின் என்ன செய்ய முடியும்? சின்னம்மாவும் தினகரனை இனி ஏற்கமாட்டார். மொத்தத்தில் தினகரன் தேற மாட்டார்.’ என்று பேசியிருக்கிறார்.  இதன் தொடர்ச்சியாக, கூடியவிரைவில் புகழேந்தி தலைமையில் ஒரு பெரிய டீம்  அ.ம.மு.க.விலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணையப்போகிறது! என்கிறார்கள். தினகரன் கட்சியினர் பல மாவட்டங்களில் அவரிடமிருந்து விலகி தாய்க்கழகத்தில் இணைந்துள்ளனர். ஆனால், முதல்வரின் மாவட்டத்தில் இதை மிகப்பெரியதாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கி,  ஆட்களைப் பிடிக்கிறாராம் புகழேந்தி. 


இந்த விஷயம் பற்றிப் பேசும் அரசியல் விமர்சகர்கள் “தினகரனை கன்னாபின்னாவென திட்டி, வெறுத்துவிட்ட புகழேந்தி, இப்போது மெதுவாக சசிகலாவையும் கழட்டிவிட்டுட்டார். இப்போதெல்லாம் அவரது  நிகழ்வுகளில் சசிகலாவின் போட்டோக்கள் இடம் பெறுவதில்லை. வேண்டுமென்றால் சேலம் நிகழ்வை பாருங்கள். மேடை ஃபிளக்ஸ் போர்டில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் சிறிய சைஸில் இருந்தன. ஜெயலலிதா போட்டோவும், அவருக்கு நிகராக புகழேந்தியின் போட்டோவுமே பெரிதாக இருந்தன. 
ஆக எடப்பாடியார் தரப்பின் உத்தரவின் பேரில் சசியை முழுக்க முழுக்க விலக்கி வைக்க துவங்கிட்டார் புகழேந்தி. இதற்குப் பெயர்தான் விஸ்வாசம்!” என்று நிறுத்தினர். 
ஆஹாங்!