சிறைத் துறையில் இருந்து மாற்றப்பட்டும், தொடர்ந்து சசிகலா மீது அவதூறு பரப்பி வரும் டிஐஜி ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகருந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். 

இந்த குற்றச்சாட்டையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா மற்றும் சில சிறை அதிகாரிகளை கர்நாடக அரசு கூண்டோடு மாற்றியது.

ரூபா மாற்றப்பட்டபோதும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள், சிறை விதிகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன ? என்பது குறித்து தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது, டிஐஜி ரூபா மீது அதிமுக அம்மா அணி சார்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் . வேறு துறைக்கு மாற்றப்பட்ட பின்பும், ரூபா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது முறையல்ல என்றும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் டிஐஜி ரூபா அரசியலுக்கு வரட்டும் என்றும் அவரை எதிர்த்து போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.