ஏஸியாநெட் தமிழ் வாசகர்களுக்கு செமத்தியாக நினைவிருக்கும்! சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்திக் கொண்டிருக்கும், கின்னஸ் சாதனை ஜல்லிக்கட்டின் ஹைலைட்ஸ் விஷயங்களை நேற்று விரிவாக எழுதியிருந்தோம்.

 

இந்நிலையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டானது காளை பிரியர்களை தாண்டி அரசியல் வட்டாரத்தையும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கர் நடத்தும் இந்த ஜல்லிக்கட்டில் நாம் குறிப்பிட்டது போலவே முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காலை எட்டு மணிக்கு முதலமைச்சர் எடப்பாடியார் வந்து அமர, ஜல்லிக்கட்டு அமர்க்களமாக துவங்கியது. 

அமைச்சர் விஜயபாஸ்கர் ‘கொம்பன்’ எனும் பெயரில் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்ததையும், அது கடந்த ஆண்டு இறந்து போனதால் அதே போல் இன்னொரு காளையை வாங்கி, அதற்கு கொம்பன் -2 என்று பெயர் வைத்து ரொம்ப ஆக்ரோஷமாக வளர்ப்பதையும் நேற்று எழுதியிருந்தோம். இன்று ஜல்லிக்கட்டில் அமைச்சரின் காளையான கொம்பன் - 2 தான் முதல் மாடாக அவிழ்த்துவிடப்பட்டது. 

கெத்தாக கொம்பன் வந்து நிற்க, அதன் பராக்கிரமங்களை மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தனர்...அப்போது தன் மாட்டைப் பார்த்து பரவசமாக எழுந்து நின்ற விஜயபாஸ்கர், ‘தில்லு இருந்தா என் மாடு மேலே கையை வெச்சுப் பாருங்க மாடு பிடி நண்பர்களே!’ என்று உற்சாக குரல் கொடுத்தார். விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டு காளை பிரியர் என்பது முதல்வருக்கு தெரியும், ஆனால் இந்தளவுக்கு இந்த விஷயத்தில் ஊறிப்போயிருப்பார் என்பதை நேரில் பார்த்து சிலிர்த்து, திகைத்தே விட்டாராம். சக அமைச்சர்களும் அப்படித்தான். இந்நிலையில் அமைச்சரின் கொம்பன் 2 வை யாருமே அடக்கவில்லை! என்பதுதான் கட்டக் கடைசி ஹைலைட் வரி.