புதுச்சேரியில் இலவச அரிசி வழங்க கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருப்பதாக முதல்வர் நாராயணசாமியும், இதில் தவறான பிரசாரம் செய்யப்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.  
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தம். கிரண் பேடி பொறுப்பேற்றது முதலே இருவருக்கும் நிழல் யுத்தம் நடைபெற்றுவருகிறது. இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டியும் நடைபெற்றுவருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அது வெளிப்பட்டிருக்கிறது. தற்போது அப்படியான ஒரு சம்பவம் வெளிப்பட்டிருக்கிறது. ‘இலவச அரிசி திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முட்டுக்கட்டைப் போடுகிறார்’  நாராயணசாமி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், ‘இலவச அரிசி வழங்க நான் முட்டுக்கட்டையாக இருப்பதாக தவறாக பிரசாரம் செய்யப்படுவதாக’ கிரண்பேடி பதிலடி தந்திருக்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இரு தினங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாத பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னையைக் கிளப்பின. இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். பின்னர்  நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சென்று கிரண்பேடியை சந்தித்து பேசியது. அப்போது இலவச அரிசி தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி தரும்படி கோரப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களின் பேசிய நாராயணசாமி, “சட்டப்பேரவையில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் நகலை ஆளுநரிடம் கொடுத்தோம். இலவச அரிசி வழங்க ஏற்கனவே அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் சொன்னோம். ஆனால், அந்த கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இலவச அரிசி வழங்க அவர் முட்டுக்கட்டையாக உள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், “புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நான் தடையாக இல்லை” என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில், “இலவச அரிசிக்கு பதிலாக மக்கள் தரமான அரிசியை வாங்க பணமாக வழங்க கூறினேன். இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்ற பிரசாரம் தவறானது.” என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.