எக்காரணத்தை கொண்டும் புதுச்சேரியில் மின்சார துறையை தனியார் மயமாக்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று பேசினார். அப்போது, “ புதுச்சேரியில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. எனவே, மாநில அரசு அனுமதியின்றி இதை செய்ய முடியாது. ஆனால், யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
புதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்கள். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கிவருகிறோம். ஆனால், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லையெனில், புதுச்சேரி மாநிலம் அதை ஏற்றுக்கொள்ளாது.
இந்த விஷயத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எக்காரணத்தை கொண்டும் புதுச்சேரியில் மின்சார துறையை தனியார் மயமாக்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மின்சார துறை மக்களுக்கு சேவை செய்யும் துறை. இது லாபம் ஈட்டும் துறை அல்ல. மாநிலங்கள் விரும்பாவிட்டால் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது.” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் நாராயணசாமி கூறுகையில், “கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மாநில வருவாயும் குறைந்துவிட்டது. அப்படி இருந்தாலும், அரசு ஊழியர்களுக்கு  சம்பளம், பென்ஷன், இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறோம். ஆளுநர் கிரண்பேடியின் தலையீட்டால் இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த தடையை இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். இன்னும் ஒரு சில தினங்களில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ள குடும்பத்துக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.