குடியரசுத் தலைவர் பதவிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே..? என்ற பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சிரிப்பையே பதிலாக கொடுத்துள்ளார். 

குடியரசுத் தலைவர் பதவிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே..? என்ற பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சிரிப்பையே பதிலாக கொடுத்துள்ளார்.புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி, தெலங்கானா இரு மாநிலங்களில் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றியதை சாதனையாக நினைக்கவில்லை. இரு மாநில மக்களையும் மதிக்கிறேன், அதனால்தான் இரு மாநிலங்களிலும் கொடியேற்றினேன் என்றார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒற்றர்களாக ஆளுநர்கள் செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளதாக கேட்கிறீர்கள். அவர் என்ன செய்வார்? ஒற்றுமையாக அவரால் ஆளுநரோடு செயல்பட முடியவில்லை. அதனால் ஒற்றர்களாக செயல்படுவதாக கூறுகிறார். நாங்கள் உற்ற தோழர்கள், தோழிகளாக செயலாற்றுகிறோம் என்று பதிலளித்தார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை அரசியலாக பார்க்கிறார்கள் எனவும் அதை நான் தெலுங்கானாவில் உணர்ந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். முதலில் ஆளுநர் என்பவர் அவருடைய வளாகத்தில் இருக்கவே நினைத்தார்கள். ஆனால் தற்போது மக்கள் சேவையை செய்யும் நிலையை எடுத்துள்ளதை வரவேற்கவேண்டும். புதுச்சேரியிலும், தெலங்கானாவிலும் என்னை "அக்கா" என்று தான் கூப்பிடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். இதில் விதிமீறல் ஏதுமில்லை. இரு மாநிலத்தின் மீதும் அன்பை தெரிவிக்கவே இதை செய்தேன். இரு மாநிலங்களும் எனது இரு குழந்தைகள். அக்குழந்தைகளுக்கு நியாயமாக நடக்கவே சிரமத்தை மீறி பணிபுரிந்தேன். இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்கிறார்கள். தமிழர்கள் சரித்திரம் படைப்போமே என்று பேசினார்

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஆளுநரும், முதல்வரும் இணைந்து நல்லது செய்கிறார்களே என்று பொறுத்துக் கொள்ள முடியாத சிலபேர்தான் கேள்வி எழுப்புகின்றனர் என்று காட்டமாக பேசினார்.குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு கைக்கூப்பி சிரித்தார். பதில் ஏதும் தராமல் புறப்பட்டார்.