பாஜக - அதிமுக இடையே நிலவி வரும் புதுச்சேரி தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து ராஜினாமா செய்த பிறகு, அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக ஆட்சி கலைந்ததால் அடுத்து புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவு நிறைவேறாததால் விரக்தி அடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனித்து போட்டியிடுவது குறித்து யோசித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் 28 தொகுதிகளிலும், பாஜக - அதிமுக மட்டும் இணைந்து போட்டியிட்டால் 23 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்ற தகவல் வெளியானது. இதனால் சற்றே உஷாரான அவர் மீண்டும் பாஜக - அதிமுக உடனான கூட்டணிக்கு திரும்பினர்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த 9ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மறுநாள் புதுச்சேரியில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா 10 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுகவும் போட்டியிடும் என அறிவித்தார். மேலும் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசியது சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அதிமுக, வெறும் 4 தொகுதிகள் தான் என்ற அறிவிப்பால் உச்சகட்ட அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பாஜக - அதிமுக இடையே நிலவி வரும் புதுச்சேரி தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது. தன்னுடைய ஒரு தொகுதியையும் சேர்த்து 5 தொகுதிகளாக கொடுத்து அதிமுகவுடனான இழுபறியை சரி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதன்படி இன்று சுமூக உடன்பாடு ஏற்பாட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
