மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்தாலும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களான மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. இதனையடுத்து, மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் கொரோனா பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பொது போக்குவரத்து எப்போது தொடங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படிதான் பொது போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவையான காலம் வரை பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.