இன்னும் ஐந்து மாதம் தான் அப்புறம் எங்கள் ஆட்சி தான் அப்போது உங்களுக்கு இருக்கிறது என்று ஸ்பெசல் டிஜிபிக்கு மேடையில் பகிரங்கமாக உதயநிதி விடுத்த மிரட்டல் ஒட்டு மொத்த போலீசாரையும் கோபம் அடைய வைத்துள்ளது.

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ரீதியிலான நிகழ்வுகளுக்கு தடை உள்ளது. ஆனால் இதனையும் மீறி திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக உதயநிதி பிரச்சாரத்தை துவங்குவதும் அவரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.

இதனிடையே முதல் நாள் உதயநிதியை கைது செய்து உடனடியாக விடுவித்த போலீசார் அடுத்தடுத்த நாட்களில் தாமதப்படுத்தினர். அதோடு மட்டும் அல்லாமல் உதயநிதி பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யும் திமுக நிர்வாகிகளை குறி வைத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகவும் சீரியஸ் ஆனவை. அதாவது தொற்று நோயை பரப்பும் உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்கிற பிரிவில் திமுக நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவாகின்றன.

அதிலும் நிர்வாகிகள் மீது அவர்களுக்கு தொடர்பில்லாத காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வருவதாக சொல்கிறார்கள். உதயநிதி பிரச்சாரத்திற்காக திருவாரூரில் இருந்து நாகை வரும் நிர்வாகிகள், நாகையில் இருந்து திருவாரூர் வரும் நிர்வாகிகள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படி இந்த வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றால் திமுக நிர்வாகிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் அழைய நேரிடும்.

அதிலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. எனவே வழக்குகளை இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் அடுத்த மூன்று மாதங்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். அப்போது திமுக நிர்வாகிகள் நேரில் ஆஜராக நேரிடும். ஆஜராகவில்லை என்றால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கும். இதனால் திமுக நிர்வாகிகள் தேர்தல் சமயங்களில் நீதிமன்றம் நீதிமன்றமாக அழைய நேரிடும். மேலும் திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளவர்களாக பார்த்து போலீசார் வழக்குப் பதிவு செய்வதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் பிரச்சாரம் பாதிக்கப்படும். இப்படி திமுக நிர்வாகிகளை குறி வைத்து வழக்குப் பதிவு செய்வது ஸ்பெசல் டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் தான் என்கிறார்கள். உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மாவட்டத்தில் முகாமிட்டு போலீசாரை குவித்து முழுமையான கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கைக்கான வியூகம் வகுத்துக் கொடுப்பதும் ராஜேஷ் தாஸ் தான் என்கிறார்கள். இவரது நெருக்கடி காரணமாகவே உதயநிதியின் பிரச்சாரம் பிசுபிசுத்துப்போனதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில் தான் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது, திமுகவினரை குறி வைத்து வழக்குப் பதிவு செய்யும் ராஜேஷ் தாசுக்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இன்னும் ஐந்து மாதம் தான், அதன் பிறகு எங்கள் ஆட்சி, அதிகாரி யார் யார் என்று பார்த்து வைத்துள்ளோம், ராஜேஷ் தாஸ் தானே, ஸ்பெசல் டிஜிபி பார்த்துக் கொள்கிறோம் என்று உதயநிதி பேசிய பேச்சு ஒட்டு மொத்த போலீஸ் அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனை அடுத்து கடுப்பான அதிகாரிகள் உதயநிதியின் கடந்த காலத்தை தோண்ட ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். அதில் இருந்து ஏதாவது பிரச்சனை கிடைத்தால் அதன் அடிப்படையில் உதயநிதியை டேமேஜ் செய்வதற்கான நடவடிக்கையும் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.