இன்னும் 11 மாதங்களில் கோவையில் உள்ள சிறையில் எஸ்.பி.வேலுமணி அடைக்கப்படுவார் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை ஸ்டாலினின் கடுங்கோபத்தின் வெளிப்பாடு என்கிறார்கள்.

தற்போதைய அதிமுக அரசில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறகு சக்திவாய்ந்த நபர் என்றால் அது எஸ்.பி.வேலுமணி தான். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணி தனது கோவை மாவட்டம் மட்டும் அல்லாமல் கொங்கு மண்டலத்தையும் தாண்டி தமிழகம் முழுவதும் தனது அதிகாரத்தை காட்டி வருவதாக பேச்சு உண்டு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதை செயல்படுத்திக் காட்டுவதிலும் வேலுமணி நம்பர் ஒன் என்று கூறுவார்கள். டெல்லியில் உள்ள தனது தொடர்புகள் மூலம் அதிமுக அரசை நிழல் போல் பாதுகாப்பவர்களிலும் வேலுமணி ஒருவர் என்று சொல்வதுண்டு.

மேலும் அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் நபர்களை கண்டுபிடித்து களையெடுக்கும் ரகசிய பணியில் எஸ்.பி.வேலுமணி டீம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறுவார்கள். அதாவது எதிர்கட்சி, பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், ஊடகங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் வேலையிலும் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஈடுபடுவதாக கூறப்படுவதுண்டு. அதிலும் ஆதாரங்கள் இல்லாமல் அதிமுக அரசின் மீது அவதூறாக பேசுபவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுப்பது எஸ்.பி.வேலுமணியின் ஸ்பெசல் டீம் என்று சொல்லப்படுவதுண்டு.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக வதந்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிருதல், முதலமைச்சரை மிகவும் ஆபாசமாக சித்தரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் குறி வைத்து வேட்டை ஆடப்ட்டனர். சென்னை, கரூர், கன்னியாகுமரி என்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே சமயம் எஸ்.பி.வேலுமணியின் கோவை மாவட்டத்தில் உள்ள திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொரோனா காலத்தில் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதால் அவர்களை சென்று அவர்களின் குடும்பத்தினர் பார்க்க கூட முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் அவர்களை ஜாமீனில் எடுக்கும் பணியிலும் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திமுகவில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐடி விங்க் நிர்வாகிகளை காலி செய்யும் திட்டத்துடன் அதிமுக செயல்படுவதாக திமுக நம்புகிறது.

இதன் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி இருப்பதாகவும் ஸ்டாலின் தரப்பு நம்புகிறது. மேலும் பிரபல ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவான செய்திகள் ஒளிபரப்புவது மற்றும் வெளியாவது போன்ற செயல்களிலும் வேலுமணி தலையீடு இருப்பதாக திமுக கருதுகிறது. இப்படி எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகளால் தங்கள் ஐடி விங்க் செயல்பாடு பாதிக்கப்படுவதாக திமுக கொந்தளித்துள்ளது. இதே போல் திமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிர்வாகிகளை தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்திருப்பதாகவும் எஸ்.பி.வேலுமணி டீம் மீது புகார் உண்டு. இதன் வெளிப்பாடு தான் கே.என்.நேருவை வைத்து ஸ்டாலின் வெளியிட்ட செம காட்ட அறிக்கை என்கிறார்கள் திமுகவினர்.