மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும். பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் 2017ல் இருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்கள் கடுமையாக உழைக்கும் நிலையில், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவர்.

இதனால் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுக்காக கடினமாக உழைக்க வேண்டியது வரும். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகும் என எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும் நிலை உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.