நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு  கிடையாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நாங்குநேரியில் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அந்தப் பிரசாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் கொடியும் இருந்தது. ஏற்கனவே தங்கள் கட்சி கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியும் புகார் கூறியிருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் பு.த. கட்சி கொடி இடம் பெற்றிருந்ததால், அக்கட்சியினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்தார்.
“2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன்  கூட்டணி அமைத்தபோது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அதை அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அரசும்  நாடாளுமன்றத் தேர்தலின்போது  அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்குநேரி சட்டப்பேரவைத் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்பதை புதிய தமிழகம் கட்சி வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது. 
இதுபோன்ற சூழ்நிலையில் புதிய தமிழகம் கட்சி தேவேந்திரகுல  வேளாளர் மக்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேறும் வரை புதிய தமிழகம் கட்சி தேவேந்திரகுல மக்களுக்கு தோளோடு தோள் நிற்கும் என உறுதி கொண்டுள்ளது நாங்குநேரி, விக்கிரவாண்டியில் ஆதரவு இல்லை என்ற  தேவேந்திரகுல மக்களின் உணர்வுகளுக்கு புதிய தமிழகம் மதிப்பளிக்கக்கிறது. இதன்படி நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  அஇஅதிமுக  வேட்பாளர்களுக்கு  ஆதரவு அளிப்பது இல்லை எனப் புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. வேறு எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்றும் புதிய தமிழகம் கட்சி தெளிவுபடுத்துகிறது” என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவிதுள்ளார்.