இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய மத்திய அரசுக்கு தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை குறித்த பரிந்துரையை மாநில அரசிடமிருந்துக் கேட்டுப் பெறுவது பெரிய காரியம் அல்ல; மத்திய அரசின் ஒரு துறையின் துணைச் செயலாளர் மூலமே இதைச் செய்து முடிக்க முடியும். ஆனால் மத்திய அரசும் இதுவரையிலும் நமது கோரிக்கையை நிறைவேற்ற எவ்வித முனைப்பும் காட்டியதாகத் தெரியவில்லை.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்த மாதம் எழுதிய கடிதமே இதற்குச் சான்று. பட்டியல் மாற்றமும் பெயர் மாற்றமும் ஒருசேர நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தபொழுது, பட்டியல் மாற்றம் செய்ய காலதாமதம் ஆகும், பெயர் மாற்றம் வேண்டுமென்றால் உடனடியாகச் செய்துவிடலாம் என்று, பலபேர் குறுக்கு உழவு ஓட்டினார்கள்; மேதாவித்தனமாகப் பேசினார்கள். ஆனால், நவம்பர் 18-ம் தேதியன்று மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில், ”மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பினால் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மூலமாக பட்டியல் மாற்றம் செய்துவிடலாம்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
எனவே சட்ட விதிமுறைகள் தெளிவாக இருக்கிறபோதும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பட்டியலிலிருந்து வெளியேறுவதற்குப் பரிந்துரை செய்ய எடப்பாடி அரசுத் தயக்கம் காட்டுவது ஏன்? பாரதப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ஆகியோரின் வாக்குறுதிகள் வெறும் கானல்நீர் தானா? இரு அரசுகளின் நடவடிக்கைகளும் உள்ளும் புறமும் இருந்தும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தேவேந்திரகுல மக்களுக்கு வஞ்சனை செய்கின்றனவோ என்ற ஆதங்கம் இலட்சோபலட்சம் தேவேந்திர குல மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இப்பொழுது முழு உண்மையும் வெளியே வந்துவிட்டது. இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என்று எவரும் இனி பொய்யுரைக்க முடியாது, போலிப் போராட்டங்களும் நடத்த முடியாது.


”சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிவிட முடியாது.” ஆம்! தேவேந்திரகுல வேளாளர்களை இனிமேலும் மத்திய, மாநில அரசுகளால் ஏமாற்ற முடியாது. பட்டியல் என்ற சாதிச் சிறையிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அப்பட்டியல் உருவாவதற்குக் காரணமாக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இலட்சக்கணக்கான மக்களோடு, தனதுப் பூர்வீக இந்து அடையாளங்களைத் துறந்து பெளத்தம் என்ற புதிய அடையாளத்தைத் தழுவிக் கொண்டார். தேவேந்திரகுல வேளாளர்கள் இந்துக்கள் என்ற தங்களுடையப் பாரம்பரிய அடையாளத்தை இழக்காமல் பட்டியலிலிருந்து வெளியேற நினைக்கிறார்கள்.
அரிஜன், தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற முகவரியற்ற இழிவுச் சொற்களை இனியும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. பட்டியல் வெளியேற்றத்தை வென்றெடுக்க எவ்விதப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் தேவேந்திரகுல மக்கள் அஞ்சக்கூடியவர்களும் அல்ல; தயங்கக்கூடியவர்களும் அல்ல. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே எங்களுடைய கோரிக்கை வெற்று அரசியல் கோஷம் அல்ல; இது தேவேந்திரகுல மக்களின் விடுதலைக்கான முழக்கம்.


எனவே பட்டியல் மாற்றம் மற்றும் பெயர் மாற்றத்திற்காக மத்திய அரசு கோரும் அனைத்துத் தரவுகளையும், மாநில அரசின் பரிந்துரையையும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். வீணாகக் காலம்தாழ்த்தாதீர்கள்; இந்த மண்ணின் மூத்தக்குடி மக்கள், உழைக்கும் மக்கள், சேர, சோழ, பாண்டிய வம்சத்தின் வழித்தோன்றல்கள் உங்கள் அரசால் வஞ்சிக்கப்பட்டார்கள், ஏமாற்றப்பட்டார்கள் என்றப் பழிச்சொல்லுக்கு ஆளாகாதீர்கள்;
”அரசு அன்று மட்டுமே வெல்லும்; அறம் நின்று வெல்லும்”
என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.