முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக கோரி ‘ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை” சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முன்னள் ராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதால் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வைக்கப்பட்டார். இவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு முற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி காவல் துறையினரால் தடுத்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு ஐந்தர் மந்தர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். 

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களது ஜனநாயக கடமையினை முடக்குகிற வகையில் செயல்பட்ட மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும். 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் ஜனநாயக, சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சியினர் மீது அடக்குமுறைகள் நாள்தோறும் ஏவி விடப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தான் இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதன் மூலம் எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. அந்த கனவை தகர்க்கிற வகையில் நாளை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க. அரசின் அராஜக போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க அணி திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.