சென்னை, அண்ணாசாலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த போராட்டங்களில் அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம், மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பலர் கூறி வந்தனர். 

போட்டிகளை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும், போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினர். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதலே சேப்பாக்கம் மைதானம் சுற்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போட்டி நடைபெற சில மணி நேரங்களே உள்ள நிலையில் மைதானத்தைச் சுற்றி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போன்ற இடங்களில் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் போராட்டத்தில் திரண்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஜினி ரசிகர் மன்றம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சீமான், பாரதிராஜா, வைரமுத்து, வெற்றிமாரன், ராம் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, அண்ணாசாலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியுள்ளனர்.