தமிழகம் முழுவதும் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஆண்டு தோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. 

சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று தமிழகத்தில் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழகத்திலிருந்து சுங்கச்சாவடிகளையே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் சட்டப் பேரவையில்  கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் சுந்தரம் எழுந்து, “உத்திரமேரூர் தொகுதியில் காலக்கெடு முடிந்தபிறகும் சில சுங்கச்சாவடிகள் மக்களிடம் பணம் வசூலித்துவருகின்றன. எனவே காலாவதி ஆன பின்பும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என திமுகவினர் தற்போது பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. 22 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றாலும் அது வேஸ்ட் என அதிமுகவினரும், பாகவினரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் சுங்கச்சாவடிகள் குறித்த பிரச்சனையில் சேர்ந்து போராடுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.