கொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் 3ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் போஸ்டர், நற்பணிகள் என திமுகவினர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 3-ம் தேதியன்று நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், அபலைகள், வீடற்றவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் என, நம்மால் முடிந்த அளவிலான பணிகளை கருணாநிதி பிறந்த நாளில் செய்ய வேண்டும்’’எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் கருணாநிதி காலத்திலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவரது மூத்த மகன் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் இந்த ஆண்டும்  போஸ்டர்களை ஒட்டி மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கருணாநிதி மறைந்த உடனேயே திமுகவில் மீண்டும் இடம்பிடிக்க மு.க. அழகிரி முயன்றார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதனால் தனி அமைப்பு அல்லது கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மாவட்டங்கள் தோறும் சென்று கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.

 ஆனால் திமுக தலைமையின் சமாதானப் பேச்சுகளால் அழகிரி அமைதி காத்தார். இதன்பின்னரும் அழகிரி திமுகவில் சேர்க்கப்படவில்லை. இதனால் அழகிரி, ரஜினிகாந்த் தலைமையிலான கட்சியில் இணைவார், பாஜகவில் ஆதரவாளர்களுடன் இணைவார் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது.