தமிழகத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், இந்த அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு தெரியாமல் வெளியாகி இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு
தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வும், 601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் உயர்வு என்றும், 1,201- - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு, 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு, 100 சதவீதம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என கூறி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தார். இதே பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகி தற்போது தான் அதில் இருந்து சற்று வெளியே வந்துள்ளதாக தெரிவித்துளவர்,இந்த சொத்து வரி உயர்வு மேலும் மக்களை பாதிப்படைய வைக்கும் என தெரிவித்துள்ளார்.

மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வு
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவிகித சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 1201 சதுரஅடி முதல் 1800 சதுர அடி வரை 100 சதவிகித வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவிகித சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவிகித வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவிகித வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கவனத்திற்கு செல்லாமல் அறிவிப்பு?
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. தமிழக முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவிகித வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழக முதலமைச்சரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
