வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வாழையடியைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறையின் திட்ட இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி பீலா ராஜேஷ் சுகாதார துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தான் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இந்த பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து பீலா ராஜேஷ் துடிப்புடன் சிறப்பாக கவனித்து வந்தார். தினமும் கொரோனா பாதிப்பு குறித்து பேட்டியளித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 11ம் தேதி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென அங்கிருந்து மாற்றப்பட்டு வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சென்னை கொரோனா சிகிச்சை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் சில நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

இதன்பின்னர், வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி, அந்த சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசின் பணியாளர் நலத்துறைக்கு சமூக ஆர்வலர் செந்தில் அனுப்பி வைத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.