பெண்களுக்கு சொத்துரிமை, உச்சநீதிமன்ற விளக்கம் தெளிவானது, வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி குடும்பச் சொத்துகளில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்பது சட்டமானது. ஆனாலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிறந்த பெண்களுக்கு மட்டும் தான் குடும்பச் சொத்துகளில் பங்கு உண்டு என்றும், வாரிசுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு முன் குடும்பத் தலைவர் இறந்திருந்தால், அவரது சொத்தில்  மகள்களுக்கு பங்கு இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.

வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட  பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்க இத்தகைய வாதங்கள் முட்டுக்கட்டையாக இருந்தன. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு சொத்து கிடைப்பதில் உள்ள அனைத்து தடைகளையும்  தகர்த்து இருக்கிறது. பெண்கள் எப்போது பிறந்திருந்தாலும் அவர்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு உண்டு; தந்தை எப்போது இறந்திருந்தாலும் அவரது சொத்தில் அவரது பெண் வாரிசுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம்  காட்டி பெண்கள் சொத்துரிமையை இனி யாரும் மறுக்கமுடியாது. அந்த வகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது.

பெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால் ஆண்களை விட அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 

ஒரு குழந்தையின் பெயருக்கு முன்னால் முதலில் தாய் பெயரின் முதல் எழுத்தையும், அதன்பிறகே தந்தை பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக)  வைத்துக் கொள்ள வேண்டும் என்று  25 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது; கட்சியினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் இந்த முறையைத் தான் கடைபிடித்து வருகின்றனர். இந்த முறையை பா.ம.க. கடைபிடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து தான் தாயார் பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக) வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு ஆணையிட்டது.மகளிரின் உரிமைகளுக்காக போராடுவதிலும், வென்றெடுப்பதிலும் தமிழகத்தின் முன்னோடி பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் மகளிருக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றி உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.