பெரியார் சிலை விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், நேரமும் தேதியும் குறிப்பிட்டால் அவரது சவாலை சந்திக்க பெரியார் தொண்டர்கள் தயார் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் திரிபுரா மாநிலத்தல் நிறுவப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈ.வெ.ரா. அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து, முகநூல் பக்கத்தில் இருந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹெச்.ராஜா, முகநூலில் என் Admin போட்ட பதிவு என் அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டள்ளது. எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.  ஆகவே ஆக்கபூர்வமாக,  அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து  தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக திமுகவினர் சென்னையில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சத்தியராஜ்,  பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டள்ளார்.

அதில், பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரமும் தேதியும் குறிப்பிட்டால் அவரது சவாலை சந்திக்க பெரியார் தொண்டர்கள் தயார் என்று நடிகர் சத்யராஜ் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.