முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் முதல் கட்சியாக தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். பாமக தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஜூலி பெற்றுக்கொண்டார். அப்போது, பேசிய ராமதாஸ் பாமகவின் தேர்தல் அறிக்கையை நேரில் வெளியிட முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். 

பாமக தேர்தல் அறிக்கை விவரம்;-

* மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.

*  இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்.

*  தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும்.

*  வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும்.

* மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். 

*  மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும். 

* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.  

* வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். 

* அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு    ஏற்படுத்தப்படும். 

*  50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். 

*  தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும். 

*  வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும். 

*  60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

*  காவிரி,  கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். 

*  தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக்    கணக்கெடுப்பு நடத்தப்படும்.

*  தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

*  தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

*  தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். 

*  தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். 

*  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

*  40 வயதைக் கடந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என குடும்பத் தலைவிகள் விரும்பிய இடங்களில் இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

*  60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

*  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

*  புதிய அரசு பதவியேற்று ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும். 

*  தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வெற்றிபெறும். 

*  தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.