அதிமுக - பாஜகவை போல திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல, சுதந்திர கூட்டணி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஆளுநர் உடனே ஒப்புதல் கொடுக்க மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகின்றன.

ஆனால், 7 பேரை விடுதலை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று பதிலளித்தார். இதுதொடர்பாக அதிமுக ஐடி பிரிவு, கொள்கை இல்லாத கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி என்று விமர்சித்திருந்தது.

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி;- எங்களது கூட்டணி அறிவுபூர்வமான, கொள்கை ரீதியான கூட்டணி. நாங்கள் கூட்டணிதானே தவிர ஒரே அரசியல் கட்சி அல்ல. திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக என அனைவரின் கருத்துகளும் வேறு வேறு. ஆனால், மதச்சார்பின்மை என்கிற இடத்தில் நாங்கள் ஒன்றுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாதது என அதிமுக ஐடி விங் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சுதந்திரமாக கருத்துகளைச் சொல்லக்கூடிய கூட்டணி எங்களது. வாய் பொத்தி கைக்கட்டி இருக்கக்கூடிய கூட்டணி இல்லை. கருத்துகளைத் தெளிவாகத் தீர்க்கமாக எடுத்துவைக்கிறோம். மேலும், அதிமுக - பாஜகவை போல திமுக - காங்கிரஸ் கூட்டணி அடிமை கூட்டணி அல்ல, சுதந்திர கூட்டணி. திமுக காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துகளை சொல்கிறோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.