உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த துருப்புச்சீட்டாக காங்கிரசால் களம் இறக்கப்பட்டவர், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருந்த அவர், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிகள் நிலவிய நிலையில், பிரியங்கா களம் இறக்கப்பட்டது, காங்கிரசுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என ராகுல் கருதினார்.

அதன்படியே, பிரியங்காவும் மாநிலம் முழுக்க சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களில் கூட்டம் திரண்டது. ஆனால் அது வாக்குகளாக மாறவில்லை என தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. உ.பியில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 58 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. 

இது பிரியங்கா அலை குறித்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. பிரியங்கா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது. ஆனால் அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கவில்லை. 

ராகுலும், பிரியங்காவும் கடினமாக உழைத்தனர் என்று எதிரணியில் இருந்த சிவசேனா கட்சியே வெளிப்படையாகப் பேசியது. ஆனால் தேர்தல் முடிவில் உழைப்பிற்குத் தகுந்த பலன் இல்லை. கடந்த தேர்தலை விடவும் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பிரியங்கா அலை தங்களுக்கு கைகொடுக்கவில்லையே எனப் புலம்புகின்றனர், உ.பி. காங்கிரசார்.