கொரோனா கொடூரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து தேர்வு வைத்த தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:- கொரோனா எனும் உயிர்கொல்லி வைரஸ் உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு அறிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது வரவேற்புக்குரியது. 

இந்நிலையில் கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துக்கொள்ள வில்லை. படிப்புத் தொடர்வது குறித்து ஒரு  வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று வாட்சப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவருகிறார்கள். மேலும், மாதத்தேர்வுகள் நடத்துவதாகக் கூறி இன்று 25.07.2020  குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து தேர்வு வைத்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை வரவழைத்திருப்பதால்  அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சமூக இடைவெளியின்றி பள்ளிக்கு கட்டாயபடுத்தி வரவழைத்திருப்பது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தையும் பெற்றோர்களுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு மிகுந்த அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது.  மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நலன்கருதி பலநெறிமுறைகளை வகுத்து தந்தும் அதனை கடைபிடிக்காமல், ஊரடங்கு காலத்தில் அத்துமீறி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து தேர்வு நடத்திய தனியார் இன்டர்நேஷ்னல் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.