தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே 5 முக்கிய அரசாணைகளை பிறப்பிப்பதற்கான கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். 

தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள தலைவர்கள் பதவியேற்ற முதல் நாளில் எதற்கான கோப்பில் முதல் கையெழுத்து போட உள்ளார்கள் என்பதை அனைவரையும் ஆர்வத்துடன் கவனிப்பது வழக்கம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள திமுக தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் எந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கோப்பில் முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே ஸ்டாலின் கையெழுத்திட உள்ளார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. 

இந்நிலையில் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்திற்கு பிறகு கலைஞர் கருணாநிதி, அண்ணா ஆகியோர் நினைவிடங்களி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின் முதலமைச்சர் அறைக்குச் சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே 5 முக்கிய அரசாணைகளை பிறப்பிப்பதற்கான கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக தற்போதைய கொரோனா காலக்கட்டத்திற்கு ஏற்றார் போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு இலவசம் என அரசாணை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.