விருத்தாச்சலம் சிறையில் இருந்த கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலை ஓர் சிந்தனைக்கூடம் என்றார் அறிஞர் அண்ணா ஆனால் இன்றைக்கு சிறைச்சாலையில் இருந்து தான் அனைத்து விதமான குற்றச்செயல்களும் நடக்கின்றன. சிறைக்குள் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றது. கஞ்சா முதல் செல்போன் வரைக்கும் சகலவசதியும் கிடைக்கிறது. ஆனால் சரியான அளவிற்கு மருத்துவவசதி இல்லாததால் சிறையில் கைதிகள் இறப்பு சம்பவம் அரங்கேறி வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாச்சலம் கிளை சிறையில் இருந்தவர் செல்வமுருகன். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி நெய்வேலி பகுதியில் திருட்டு வழக்கில் கைதான இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையயடுத்து செல்வமுருகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

 கடந்த மாதம் 15 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டடார். அதேபோல் கொள்ளை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திருப்பதி சில தினங்களுக்கு முன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.